தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

பூம்புகார்

  1. பண்டைய தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களுள் பூம்புகாரும் ஒன்று.
  2. காப்பிய மாந்தர்களான கோவலனும், கண்ணகியும் இந்த ஊரில்தான் பிறந்தார்கள்.
  3. பூம்புகார் புகழ்பெற்று விளங்கிய துறைமுக நகரமும் கூட.
  4. ஒவ்வொரு நாடும் தனது தேவைக்குப் போக எஞ்சிய பொருள்களை அண்டைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், தங்கள் நாடுகளில் பற்றாக்குறையாக உள்ள பொருள்களைப் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் வேண்டியிருந்தது.
  5. இதற்காகக் கடல்வழி வணிகம் அதிகரித்த போது, துறைமுகங்கள் உருவாகின.
  6. அத்தகைய துறைமுகங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றுதான் பூம்புகார் துறைமுகம் ஆகும்.
  7. இது வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது.
  8. இது காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் தற்போதைய மயிலாடுதுறை அருகே உள்ளது.

பூம்புகார் துறைமுகம்

  1. இந்த நகரத்துக்குப் புகார், காவிரிப்பூம்பட்டினம் போன்ற பெயர்களும் உண்டு.
  2. சங்க காலச் சோழ அரசின் துறைமுகம் பூம்புகார்.
  3. பூம்புகார் துறைமுகத்தில் சீரும், சிறப்புமாக நடந்த வணிகம் குறித்து சங்க இலக்கிய நூலான பட்டினப்பாலையிலிருந்தும், இரட்டைக் காப்பிய நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
  4. இவற்றில் குறிப்பாக, சிலப்பதிகாரம் பூம்புகாரின் சிறப்பைப் பேசுகின்றது.
  5. சிலப்பதிகார நாயகி கண்ணகியின் தந்தை மாநாய்கன். மாநாய்கன் என்றால் பெருங்கடல் வணிகன் என்று பொருள்.
  6. நாயகன் கோவலனின் தந்தை மாசாத்துவன். மாசாத்துவன் என்றால் பெருவணிகன் என்று பொருள்.
  7. இதிலிருந்து பெருவணிகர்களும் பெருங்கடல் வணிகர்களும் நிறைந்த பகுதியாக பூம்புகார் விளங்கியது தெளிவாகிறது.
  8. இங்கு வணிகம் செய்ய கிரேக்கம், ரோம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.
  9. தொடர் வணிகத்தின் காரணமாக இவர்களில் பலர் பூம்புகார் நகரிலேயே வசித்திருக்கின்றனர்.
  10. ஆகவே, இங்கு வெளிநாட்டவர் குடியிருப்புகளும் தோன்றின.
  11. எனவே இங்கு பல்வேறு மொழிகளும் பேசப்பட்டன.
  12. கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கி வைக்கவும், ஏற்றவும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அயல்நாட்டு வணிகர்கள் உரையாடவும், இங்குள்ள மக்களுடன் உறவாடவும் வாய்ப்புகள் உருவாயின.
  13. பூம்புகார் மக்கள் வெளிநாட்டவர் மொழிகளைக் கற்றறிந்தனர். அயல்நாட்டவரும் தமிழ் மொழியைக் கற்றனர். இதனால் பண்ட மாற்றங்களோடு கூடவே மொழி மாற்றமும் ஏற்பட்டது.
  14. இதன் விளைவாகச் சிந்தனைப் பரிமாற்றமும் பண்பாட்டுக் கலப்பும் நிகழ்ந்தன.
  15. பூம்புகார் நகரத்து வணிகர்கள் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர் பெற்றவர்களாக விளங்கினார்கள்.
  16. மிகச் சரியான விலைக்கே பொருள்களை விற்றனர். கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவறான செயல் என்று அவர்கள் கருதினர் என்பதை பட்டினப்பாலை கூறுகிறது.
  17. பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கி.மு 2-ம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர்.
  18. இதிலிருந்தே புகார் நகரின் தொன்மையை நாம் அறிந்து கொள்ளலாம்.
  19. கடல் வழியாகக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
  20. கருமிளகு தரைவழித் தடங்கள் வழியே இறக்குமதி ஆனது.
  21. வடமலையிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. அது மெருகூட்டப்பட்டு மீண்டும் அயல்நாட்டுக்கு ஏற்றுமதியானது.
  22. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சந்தனமும், தென்கடல் பகுதியிலிருந்து முத்தும், கிழக்குப் பகுதியிலிருந்து பவளமும், ஈழத்திலிருந்து உணவுப்பொருள்களும் இறக்குமதியாகின.
  23. பூம்புகார் மற்ற நகரங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் கட்டமைக்கப்பட்டிருந்தது. வீடுகள் ஒழுங்கான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. அகன்ற, நேரான தெருக்களைக் கொண்டதாக புகார் நகரம் விளங்கியது.
  24. இங்கு கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பூம்புகார் நகர வாழ்வினைச் சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தினை வாசித்தும் பட்டினப்பாலை போன்ற சங்க இலக்கியங்களை வாசித்தும் அறியலாம்.
  25. கி.பி. 200 வரை சிறப்புற்றுத் திகழ்ந்த புகார் நகரம் கடற்கோள் அல்லது கடற்சீற்றங்களால் அழிந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன் சான்றுகளைப் பூம்புகார் நகரில் இன்றும் காணலாம்.

மதுரை

  1. இந்தியாவில் உள்ள மிகப் பழமையான நகரங்களில் மதுரையும் ஒன்று.
  2. சங்கம் வளர்த்த நகரம் என்று பெயர் பெற்றுள்ளதில் இருந்தே இதன் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம்.
  3. பண்டைய காலத்தில் மதுரையை முறையே பாண்டியர்களும், சோழர்களும், களப்பிரர்களும் ஆட்சி செய்தனர். இடைக்காலத்தில் பிற்காலச் சோழர்களும், பிற்காலப் பாண்டியர்களும், அவர்களைத் தொடர்ந்து நாயக்கர்களும் ஆட்சி புரிந்தனர்.
  4. இதன் விளைவாகப் பண்பாட்டுக் கலப்பு நிகழ்ந்தது. வணிகம் செழித்தது. இதற்கான சான்றுகள் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.
  5. சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்கள் 49 பேர்.
  6. கிழக்குக் கடற்கரையில் அமைந்திருந்த தொண்டியில் இருந்து மதுரைக்கு அகில், சந்தனம் போன்ற நறுமணப் பொருள்கள் கொண்டு வரப்பட்டன.
  7. பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன் முத்துக்களை உவரி என்னுமிடத்திலிருந்து இறக்குமதி செய்தார். பாண்டியர் துறைமுகமான கொற்கைக்கு அருகில் உவரி உள்ளது.
  8. ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மதுரையில் இருந்துள்ளது.
  9. பிறநாட்டு நாணயங்களும் மதுரையில் அச்சடிக்கப்பட்டது, மதுரையின் புகழுக்கு ஒரு சான்று ஆகும்.
  10. புகழ்பெற்ற கிரேக்க கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிசின் குறிப்புகளில் மதுரையைப் பற்றிய தகவல்கள் உண்டு.
  11. மௌரிய வம்ச அரசனான சந்திர குப்தரின் அமைச்சரான சாணக்கியர் மதுரையைப் பற்றித் தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  12. மதுரை நகரைச் சுற்றிலும் இருந்த அகழியில் யானைகள்கூடச் செல்லும் அளவுக்கு அகலமான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.
  13. இவ்வாறு மதுரை பண்டைய காலத்தில் சிறப்புற்றுத் திகழ்ந்தது.

தூங்கா நகரம்

நாளங்காடி, அல்லங்காடி என்ற இரண்டு வகை அங்காடிகள் மதுரையில் இருந்தன. நாளங்காடி என்பது பகல் பொழுதிலான அங்காடியாகும். அல்லங்காடி என்பது இரவு நேரத்து அங்காடியாகும். இரவு - பகல் வேறுபாடு இல்லாமல் உயிர்ப்புள்ள நகரமாக மதுரை விளங்கியதால் தூங்கா நகரம் என்று அழைக்கப்பட்டது.

பெண்கள் எந்த விதப் பயமும் இன்றி இரவு நேரத்தில் அல்லங்காடியில் பொருள்களை வாங்கிச் சென்றனர். அந்த அளவிற்குப் பாதுகாப்பானதாக மதுரை நகர் விளங்கியது.

காஞ்சி

  1. கல்வி கற்பதற்கான இடத்தினைப் பள்ளி என்று அழைக்கிறோம் அல்லவா? இப்பள்ளிகள் காஞ்சி நகரில் தான் முதன்முதலில் ஏராளமாக அமைக்கப்பட்டன.
  2. சமணர் அமைத்த பள்ளிகளில் சமண மாணவர்களும், புத்த விகாரங்களில் புத்த மாணவர்களும் பயின்றனர்.
  3. நாளந்தாப் பல்கலைக்கழகத்தில் பயின்ற சீனப் பயணி யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காகக் காஞ்சியில் இருந்த கடிகைக்கு வந்திருக்கிறார்.
  4. "நகரங்களில் சிறந்தது காஞ்சி" என்று கவிஞர் காளிதாசர் கூறுகிறார்.
  5. "கல்வியில் கரையிலாத காஞ்சி" என்று நாயன்மார்களுள் முதன்மையானவரான திருநாவுக்கரசர் காஞ்சி நகரைப் புகழ்ந்துள்ளார்.
  6. புத்தகயா, சாஞ்சி போன்ற ஏழு இந்தியப் புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று என சீன வரலாற்றாசிரியர் யுவான் சுவாங் குறிப்பிடுகிறார்.
  7. தொண்டை நாட்டில் உள்ள மிகப் பழமையான நகரம் காஞ்சியாகும்.
  8. தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர் போன்ற சான்றோர்கள் காஞ்சியில் பிறந்து வாழ்ந்தவர்கள். இச்செய்திகள் மூலம் காஞ்சியின் கல்விச் சிறப்பை அறியலாம்.
  9. காஞ்சி, "கோயில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள கைலாசநாதர் கோவில் புகழ்பெற்றது. பிற்காலப் பல்லவ மன்னன் இராஜசிம்மன் இந்த கற்கோவிலைக் கட்டினார்.
  10. பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோவில்களும் கட்டப்பட்டன.
  11. பௌத்தத் துறவியான மணிமேகலை தனது இறுதிக் காலத்தைக் காஞ்சியில் கழித்தார் என்பது இதன் சிறப்புக்கு இன்னொரு சான்று ஆகும்.
  12. வேளாண்மைச் சமூகத்தில் நீர் மேலாண்மைக்கு முதன்மையான இடம் உண்டு.
  13. காஞ்சி நகரைச் சுற்றிலும் நுற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது; இந்த ஏரிகள் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. இன்றும் காஞ்சிபுரம் 'ஏரிகளின் மாவட்டம்' என்று அழைக்கப்படுவதை நாம் அறிவோம்.
  14. கரிகாற் சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை, காஞ்சிபுரத்தைச் சுற்றிலும் உள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்கள் மூலம் தமிழர்களின் நீர் மேலாண்மைத் திறனை அறிந்து கொள்கிறோம்.

சேர நாடு கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள்.
சோழ நாடுதஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள்
பாண்டிய நாடுமதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள்
தொண்டை நாடுகாஞ்சிபுரம், திருவள்ளுர், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி

சோழ நாடு சோறுடைத்து
பாண்டிய நாடு முத்துடைத்து
சேர நாடு வேழமுடைத்து
தொண்டை நாடு சான்றோருடைத்து

புகார் துறைமுக நகரம்
மதுரை வணிக நகரம்
காஞ்சி கல்வி நகரம் ஆகும்

உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் மெசபடோமியா நாகரிகம். இது 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.