திருக்குற்றாலக் குறவஞ்சி

நூல்குறிப்பு

  1. இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி.
  2. ஆசிரியர் திரிகூட ராசப்பக்கவிராயர் ஆவார்.
  3. குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல்.
  4. ஓசைநயமிக்க பாடல்கள் இந்நூலில் நிறைந்து காணப்படுகின்றன.

குற்றால மலையின் வளம்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்

கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்

தேனருவித் திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனல்இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்

குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே!


ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்

ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

வாடக் காண்பது மின்னார் மருங்கு

வருந்தக் காண்பது சூல்உளைச் சங்கு

போடக் காண்பது பூமியில் வித்து

புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து

தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி

திருக்குற் றாலர் தென் ஆரிய நாடே!

- திரிகூட ராசப்பக் கவிராயர்

சொல்பொருள்

  1. வானரங்கள் - இச்சொல், பொதுவாகக் குரங்குகளைக் குறிக்கும். இங்கு ஆண் குரங்குகளைக் குறித்தது.
  2. மந்தி - பெண் குரங்கு.
  3. வான்கவிகள் - தேவர்கள்.
  4. கமனசித்தர் - வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர்கள்.
  5. காயசித்தி – மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை.
  6. பரிக்கால் - குதிரைக்கால்.
  7. கூனல் - வளைந்த.
  8. வேணி - சடை.
  9. மின்னார் - பெண்கள்.
  10. மருங்கு - இடை.
  11. சூல்உளை - கருவைத்தாங்கும் துன்பம்.