நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம் கீழ்க்கணக்கு
சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினெட்டு நூல்கள். இவற்றை, ‘மேல்கணக்கு நூல்கள்' எனக் கூறுவர்.
சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு, ‘பதினெண்கீழ்க்கணக்கு’ என வழங்கப்படுகிறது. இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன. பதினெண் என்றால், பதினெட்டு என்பது பொருள். இந்நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறுவர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.