கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!
ஊழி பலநூறு கண்டதுவாம், அறிவு
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்!
பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் – அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர்
மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த
மேதினி வாழ்வழி காட்டிருக்கும்!
- பெருஞ்சித்திரனார்
பெருஞ்சித்திரனார்
வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி
மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி
ஊன் தோன்றி உயிர் தோன்றி உணர்வு தோன்றி
ஒளி தோன்றி ஒலி தோன்றி வாழ்ந்த அந்நாள்
தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி!
- வாணிதாசன்