6TH TAMIL TERM 2 UNIT 1
மூதுரை
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
- ஒளவையார்
சொல்லும் பொருளும்
- மாசற - குற்றம் இல்லாமல்
- சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்தால்
- தேசம் - நாடு
நூல் வெளி
- இந்நூலின் ஆசிரியர் ஔவையார்.
- இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
- மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
- சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
- இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.
1. மாணவர்கள் நூல்களை ................ கற்க வேண்டும்.
அ) மேலோட்டமாக
ஆ) மாசுற
இ) மாசற
ஈ) மயக்கமுற
2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .............. .
அ) இடம் + மெல்லாம்
ஆ) இடம் + எல்லாம்
இ) இட + எல்லாம்
ஈ) இட + மெல்லாம்
3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............. .
அ) மாச + அற
ஆ) மாசு + அற
இ) மாச + உற
ஈ) மாசு + உற
4. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ................ .
அ) குற்றமில்லாதவர்
ஆ) குற்றம்இல்லாதவர்
இ) குற்றமல்லாதவர்
ஈ) குற்றம்அல்லாதவர்
5. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ............. .
அ) சிறப்புஉடையார்
ஆ) சிறப்புடையார்
இ) சிறப்படையார்
ஈ) சிறப்பிடையார்
துன்பம் வெல்லும் கல்வி
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே – நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே
மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது
துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் - நீ
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - அறிவு
வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்.
வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்.
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
சொல்லும் பொருளும்
- தூற்றும்படி - இகழும்படி
- மூத்தோர் - பெரியோர்
- மாற்றார் - மற்றவர்
- மேதைகள் - அறிஞர்கள்
- நெறி - வழி
- வற்றாமல் - குறையாமல்
நூல் வெளி
- எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
- திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
- மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.
1. மாணவர் பிறர் .............. நடக்கக் கூடாது.
அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி
2. நாம் .............. சொல்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்
3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............
அ) கையில் + பொருள்
ஆ) கைப் + பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்
4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ............ .
அ) மானம்இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா
கல்விக்கண் திறந்தவர்
கல்விக் கண் திறந்தவர் என்று தந்தை பெரியாரால் மனதாரப் பாராட்டப்பட்ட மறைந்த மேனாள் முதல்வர் காமராசர் ஆவார்.
காமராசரின் சிறப்புப் பெயர்கள்
- பெருந்தலைவர்
- கருப்புக் காந்தி
- படிக்காத மேதை
- கர்மவீரர்
- ஏழைப்பங்காளர்
- தலைவர்களை உருவாக்குபவர்
காமராசரின் கல்விப்பணிகள்
- காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
- மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.
- மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
- பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
- பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.
- மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடைமருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார்.
- தமிழ்நாட்டில் பல கிளைநூலகங்களைத் தொடங்கினார்.
- இவ்வாறு கல்விப்புரட்சிக்கு வித்திட்டவர் காமராசரே ஆவார்.
காமராசருக்குச் செய்யப்பட்ட சிறப்புகள்
- மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
- நடுவண் அரசு 1976-இல் பாரதரத்னா விருது வழங்கியது.
- காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
- சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
- சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
- ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்
அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை
ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
இ) வழி தெரியவில்லை
ஈ) பேருந்து வசதியில்லை
2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பசி + இன்றி
ஆ) பசி + யின்றி
இ) பசு + இன்றி
ஈ) பசு + யின்றி
3. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) படி + அறிவு
ஆ) படிப்பு + அறிவு
இ) படி + வறிவு
ஈ) படிப்பு + வறிவு
4. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) காட்டாறு
ஆ) காடாறு
இ) காட்டுஆறு
ஈ) காடுஆறு
1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ............ அறிமுகப்படுத்தினார்.
2. காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்' என மனதாரப் பாராட்டியவர் ................... .
நூலகம் நோக்கி
அண்ணா நூற்றாண்டு நூலகம்.
- அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்கள்
- தரைத்தளம் : சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்
- முதல் தளம் : குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
- இரண்டாம் தளம் : தமிழ் நூல்கள்
- மூன்றாம் தளம் : கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
- நான்காம் தளம் : பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
- ஐந்தாம் தளம் : கணிதம், அறிவியல், மருத்துவம்
- ஆறாம் தளம் : பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
- ஏழாம் தளம் : வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
- எட்டாம் தளம் : கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு
- ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் இதுதான்.
- தரைத்தளத்தோடு எட்டு அடுக்குகளைக் கொண்டது.
- இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர்.
- ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் சீனாவில் உள்ளது.
- முனைவர் இரா. அரங்கநாதன். நூலக விதிகளை உருவாக்கியவர். இவர் இந்திய நூலகவியலின் தந்தை (Father of Indian library science) என்று அழைக்கப்படுகிறார்.
- தரைத் தளத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது. அவர்கள் தொட்டுப் பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி நூல்கள் உள்ளன. கேட்டு அறிய ஒலி வடிவ நூல்கள், குறுந்தகடுகள் வடிவில் உள்ளன. அவர்களுக்கு உதவி செய்யப் பணியாளர்களும் உள்ளனர். இங்கு பிரெய்லி எழுத்தில் நூல்களை உருவாக்கும் கருவியும் உள்ளது. படியெடுக்கும் வசதியும் உண்டு.
- முதல் தளம் குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப் பட்ட பகுதி. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் செயற்கை மரம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. சிறுவர்கள் மட்டுமல்ல அனைவரின் மனத்தையும் கொள்ளைகொள்ளும் பகுதி இது. இங்கு இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன. பிற நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.
- ஏழாம் தளத்தில் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் உள்ளது. இங்குப் பழைமையான ஓலைச் சுவடிகள் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளன. இதே தளத்தில் வரலாறு, புவியியல், சுற்றுலா நூல்களும் உள்ளன. இங்கு அனைத்துவகைப் போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான நூல்கள் உள்ளன. மின் நூலகமும் உள்ளது. அனைத்துத் துறை சார்ந்த தரமான மின்நூல்களும் மின் இதழ்களும் உள்ளன.
நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் சிலர் அறிஞர் அண்ணா, ஜவஹர்லால் நேரு அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ்
சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
6TH TAMIL TERM 2 UNIT 2
ஆசாரக்கோவை
நூல்குறிப்பு
- ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
- இவர் பிறந்த ஊர் கயத்தூர்.
- ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்.
- இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.
பாடல்
நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் - இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து.
- பெருவாயின் முள்ளியார்
சொற்பொருள்
- நன்றியறிதல் - பிறர் செய்த உதவியை மறவாமை
- ஒப்புரவு - எல்லோரையும் சமமாகப் பேணுதல்
- நட்டல் - நட்புக் கொள்ளுதல்
1. பிறரிடம் நான் ............. பேசுவேன்.
அ) கடுஞ்சொல்
ஆ) இன்சொல்
இ) வன்சொல்
ஈ) கொடுஞ்சொல்
2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது.............. ஆகும்.
அ) வம்பு
ஆ) அமைதி
இ) அடக்கம்
ஈ) பொறை
3. அறிவு+உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) அறிவுடைமை
ஆ) அறிவுஉடைமை
இ) அறியுடைமை
ஈ) அறிஉடைமை
4. இவை+எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்
அ) இவைஎட்டும்
ஆ) இவையெட்டும்
இ) இவ்வெட்டும்
ஈ) இவ்எட்டும்
5. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நன்றி+யறிதல்
ஆ) நன்றி+அறிதல்
இ) நன்று+அறிதல்
ஈ) நன்று+யறிதல்
6. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) பொறுமை+உடைமை
இ) பொறு+யுடைமை
ஆ) பொறை+யுடைமை
ஈ) பொறை+உடைமை
கண்மணியே கண்ணுறங்கு
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!
தந்தத்திலே தொட்டில் கட்டித்
தங்கத்திலே பூ இழைத்துச்
செல்லமாய் வந்து உதித்த
சேரநாட்டு முத்தேனோ!
வாழை இலை பரப்பி
வந்தாரைக் கை அமர்த்திச்
சுவையான விருந்து வைக்கும்
சோழநாட்டு முக்கனியோ!
குளிக்கக் குளம் வெட்டிக்
குலம்வாழ அணை கட்டிப்
பசியைப் போக்க வந்த
பாண்டிநாட்டு முத்தமிழோ!
கண்ணே கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு!
சொல்லும் பொருளும்
- நந்தவனம் - பூஞ்சோலை
- பார் - உலகம்
- பண் - இசை
- இழைத்து - பதித்து
தொகைச்சொற்களின் விளக்கம்
- முத்தேன் – கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்
- முக்கனி - மா, பலா, வாழை
- முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
நூல் வெளி
- தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
- தால் என்பதற்கு நாக்கு என்று பொருள்.
- நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது.
- குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.
1. 'பாட்டிசைத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பாட்டி+சைத்து
ஆ) பாட்டி+இசைத்து
இ) பாட்டு+இசைத்து
ஈ) பாட்டு+சைத்து
2. 'கண்ணுறங்கு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கண்+உறங்கு
ஆ) கண்ணு+உறங்கு
இ) கண்+றங்கு
ஈ) கண்ணு+றங்கு
3. வாழை+இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வாழையிலை
ஆ)வாழைஇலை
இ) வாழைலை
ஈ)வாழிலை
4. கை+அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) கைமர்த்தி
ஆ) கைஅமர்த்தி
இ) கையமர்த்தி
ஈ) கையைமர்த்தி
5. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்
அ) மறைந்த
ஆ) நிறைந்த
இ) குறைந்த
ஈ) தோன்றிய
தமிழர் பெருவிழா
- இயற்கையோடு இணைந்து வாழ்வதே தமிழரின் வாழ்க்கைமுறை ஆகும்.
- இயற்கையை வணங்குதல் தமிழர் மரபு.
- தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன.
- அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும்.
- இது தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது.
- கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா பொங்கல் விழா.
- உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத்திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர்.
- எனவே, இத்திருவிழாவை அறுவடைத்திருவிழா என்றும் அழைப்பர்.
- அந்தச் சமயத்தில் இயற்கை அன்னை பசுமையான ஆடை உடுத்தி, பல நிறப் பூக்களைச் சூடி இருப்பாள். காயும் கனியும் கரும்பும் எங்குப் பார்த்தாலும் விளைந்து காட்சி தரும்.
- உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர்.
- எனவே, இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர்.
- பொங்கல் திருநாள் இரண்டு நாள்கள் முதல் நான்கு நாள்கள் வரை கொண்டாடப்படுகிறது. இது வட்டாரத்திற்கு வட்டாரம் மாறுபடுகிறது.
- போகித்திருநாள்: "பழையன கழிதலும் புதியன புகுதலும்" (நன்னூல் நூற்பா-462 ) என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் (போக்கி) போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும்.
- பொங்கல் திருநாள்:
- தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாள் ஆகும்.
- இத்திருநாளன்று வாசலில் வண்ணக் கோலமிடுவர்.
- மாவிலைத் தோரணம் கட்டுவர்.
- புதுப்பானையில் புத்தரிசியோடு வெல்லம், முந்திரி, நெய் சேர்த்துப் பொங்கலிடுவர்.
- பொங்கல் என்பதற்குப் பொங்கிப்பெருகி வருவது என்று பொருள்.
- பொங்கல் பொங்கி வரும் வேளையில் "பொங்கலோ பொங்கல்" என்று மங்கல ஒலி எழுப்பிப் போற்றுவர்.
- "பொங்கல் பொங்கி வருவதுபோல் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கிப் பெருகும்" என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.
- பின்னர், தலைவாழை இலையிட்டுப் பொங்கலைப் படைப்பர்.
- கரும்பு, மஞ்சள் கொத்து, தேங்காய், பழங்கள், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வைத்து வழிபடுவர்.
- விளைச்சலுக்குக் காரணமான கதிரவனை நன்றியோடு வணங்கி மகிழ்வர்.
- சர்க்கரைப் பொங்கலை அனைவருக்கும் அளித்துத் தாமும் உண்டு மகிழ்வர்.
- மாட்டுப் பொங்கல்:
- பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல்.
- மாடுகள் உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுகின்றன.
- மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு.
- உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன.
- அவற்றிற்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
- மாட்டுப் பொங்கலன்று மாடுகளை நீராட்டுவர்.
- கொம்புகளைச் சீவி வண்ணங்கள் தீட்டுவர்.
- மாடுகளின் கழுத்திலே மணிகளைக் கட்டுவர். பூவும் தழையும் சூட்டுவர்.
- மாட்டுக்கு , மஞ்சள், குங்குமம் இடுவர். பொங்கல், தேங்காய், பழங்கள், வெற்றிலை பாக்கு போன்றவற்றைப் படைத்து வழிபடுவர்.
- மாட்டுப்பொங்கல் நாளிலோ அதற்கு அடுத்த நாளிலோ சில ஊர்களில் மஞ்சுவிரட்டு நடைபெறும்.
- மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும்.
- இவ்விளையாட்டு மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது.
- காணும் பொங்கல்:
- மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும்.
- இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர். குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர்.
- மேலும் பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.
- இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழாவே பொங்கல் விழா ஆகும்.
- உலகு எங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
தெரிந்து தெளிவோம்
வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
திருவள்ளுவர் கி.மு (பொ.ஆ.மு) 31இல் பிறந்தவர். எனவே, திருவள்ளுவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31ஐக் கூட்டிக்கொள்ள வேண்டும். (எ.கா.) 2018 + 31 = 2049
தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது.
அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் லோரி என்று கொண்டாடப்படுகிறது. குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது.
1. கதிர் முற்றியதும் .......... செய்வர்.
அ) அறுவடை
ஆ) உரமிடுதல்
இ) நடவு
ஈ) களையெடுத்தல்
2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ............ கட்டுவர்.
அ) செடி
ஆ) கொடி
இ) தோரணம்
ஈ) அலங்கார வளைவு
3. பொங்கல்+அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பொங்கலன்று
ஆ) பொங்கல்அன்று
இ) பொங்கலென்று
ஈ) பொங்க அன்று
4. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) போகி+பண்டிகை
ஆ) போ+பண்டிகை
இ) போகு+பண்டிகை
ஈ) போகிப்+பண்டிகை
5. பழையன கழிதலும் ............... புகுதலும்.
அ) புதியன
ஆ) புதுமை
இ) புதிய
ஈ) புதுமையான
6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும்.
பட்டுப் போன மரத்தைக் காண ....... தரும்.
அ) அயர்வு
ஆ) கனவு
இ) துன்பம்
ஈ) சோர்வு