16-வது நிதிக் குழுவுக்கு புதிதாக 3 அதிகாரி பணியிடங்கள்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அர்விந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக் குழுவுக்கு உதவும் வகையில் புதிதாக 3 அதிகாரிகளுக்கான பணியிடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 16-வது நிதிக் குழுவுக்கு உதவிடும் வகையில், இணைச் செயலர் அந்தஸ்தில் மூன்று பதவிகள் அதாவது இரண்டு இணைச் செயலர் மற்றும் ஒரு பொருளாதார ஆலோசகர் பதவிகளை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட பதவிகள் ஆணையத்தின் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கு உதவ வேண்டும். ஆணையத்தின் மற்ற அனைத்து பதவிகளும் ஏற்கெனவே வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 டிசம்பர் 31-ம் தேதி, நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவரான அர்விந்த் பனகாரியாவை 16-வது நிதிக் குழுஆணையத்தின் தலைவராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆணையத்தின் செயலராக ரித்விக்ரஞ்சனம் பாண்டே நியமிக்கப்பட்டார். இந்த கமிஷன் நிதிப் பங்கீடுதொடர்பான தனது அறிக்கையை 2025 அக்டோபர் 31 அன்று குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கும். இந்தகமிஷனின் பரிந்துரைகள் 2026 ஏப்ரல் 1 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான வரிப் பகிர்வு மற்றும் வருவாய் பெருக்கம் தொடர்பான பரிந்துரைகளை 16-வது நிதிக் குழு வழங்கும். என்.கே.சிங் தலைமையிலான 15-வது நிதிக் குழு 2021-22முதல் 2025-26 வரையிலான ஐந்தாண்டு காலத்துக்கு வழங்கப்பட்ட பரிந்துரையின்படி வரித் தொகுப்பில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தது. இதேமாதிரியான பரிந்துரையைத்தான் 14-வது நிதிக் குழுவும் வழங்கியது.

மருந்து ஏற்றுமதி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ), நெதர்லாந்து, டொமினிக் குடியரசு மற்றும் ஈக்குவடார் நாடுகளின் ஒழுங்குமுறை ஆணையங்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக சிடிஎஸ்சிஓ மற்றும் டொமினிக் குடியரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மருந்து துறை இயக்குனரகம் இடையே கடந்தாண்டு அக்டோபர் 4-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து மருந்து ஏற்றுமதி அதிகரிக்கும், மருந்து துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இதேபோல், நெதர்லாந்து சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் கடந்தாண்டு நவம்பர் 7-ம் தேதி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிடிஎஸ்சிஓ கையெழுத்திட்டது. இதன் மூலம் மருந்து பொருட்கள்ஒழுங்குமுறை தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டு, ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும். இதேபோன்ற ஒழுங்கு முறை ஒப்பந்தத்தில், ஈக்குவடார் நாட்டுடன் சிடிஎஸ்சிஓ கடந்தாண்டு நவம்பர் 7-ம் தேதி கையெழுத்திட்டது. இந்த 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும், மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இவற்றின் மூலம் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி அதிகரித்து அந்நியச் செலாவணி ஈட்டுவதற்கு வழிவகுக்கும்.